விழுப்புரம் அருகே விபத்தில் வாலிபர் உயிரிழப்பு பொதுமக்கள் சாலை மறியல்
போலீசார் விசாரணை
விழுப்புரம் அடுத்த மரகதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் கோபு,18; விழுப்புரம் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று மதியம் வீட்டிலிந்து தனது ஸ்பிளண்டர் பைக்கில் விழுப்புரம் சென்றார்.உடன் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் மகன் தரணிதரன், 17; சென்றார். பைக்கை கோபு ஓட்டினார்.மரகதபுரம் சாலையிலிருந்து ஏனாதிமங்கலம் - விழுப்புரம் சாலையில் உள்ள திருப்பச்சாவடிமேடு அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த ரெனால்ட் நிசான் கார் மோதியது. அதில் படுகாயமடைந்த கோபு, தரணிதரனை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கோபு இறந்தார்.தகவல் அறிந்த மரகதபுரம் பகுதி மக்கள் விபத்து நடந்த திருப்பச்சாவடிமேடு பகுதியில் திரண்டு, இந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 11:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தினர். இதனையடுத்து, 12:00 மணியளவில் மறியலை கை விட்டனர்.புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.