வடகிழக்கு பருவமழை: முன்னேற்பாடு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து மு.ஆசியா மரியம் ஆய்வு.

வடகிழக்கு பருவழையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட 33 இடங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள 330 பொறுப்பாளர்கள் நியமனம். நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மு.ஆசியா மரியம், முன்னேற்பாடு பணிகள், மீட்பு மற்றும் நிவாரண பணிகள்

Update: 2024-10-15 12:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் நாமக்கல் ஆகிய வட்டங்களில் இன்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். திருச்செங்கோடு நகராட்சி, சூரியம்பாளையம், செங்குந்தர் திருமண மண்டபம், பரமத்தி வேலூர் வட்டம், ஜமீன் இளம்பிள்ளை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாம்களில் பார்வையிட்டு நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வெள்ள நிவாரண முகாம்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், பொதுமக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள், வழங்கப்பட உள்ள நிவாரண பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். மேலும், நிவாரண மையங்களில் தங்க வைக்க திட்டமிட்டுள்ள நபர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். நிவாரண மையங்களில் உள்ளவர்களுக்குத் தேவையான ஊசி மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஊர்தி ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை, வடகரையாத்தூர் பள்ளப்பாளையம் ஏரி, இராமதேவம் ஊராட்சி, திருமணிமுத்தாறு, நாமக்கல் மாநகராட்சி, கொண்டிசெட்டிப்பட்டி ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, ஆறுகள் மற்றும் கால்வாய்களின் முழு அகலத்திற்கும் நீர் வழிப்பாதை உள்ளதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். ஆறு, ஏரிகளின் உபரி நீர் வெளியேற்றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறும் நீர்வழிப் பாதைளில் உபரி நீர் தங்குதடையின்றி செல்வதை உறுதி செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி, பச்சகவுண்டன்வலசு பகுதியில் செ.வசந்தி வீடு கனமழையின் காரணமாக பகுதி அளவு சேதமடைந்ததை தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண உதவித்தொகையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார். இந்த ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) .ச.பிரபாகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News