நாமக்கல் அருகே கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபரை கைது செய்யக்கோரி வருவாய்துறையினர் காத்திருப்பு போராட்டம்!

400-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திருமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Update: 2024-10-15 15:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமிநரசிம்மன் வரவேற்றார். போராட்டத்தில் பரமத்தி வேலூர் அருகே நருவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமனை பணி செய்ய விடாமல் தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பலரும் பேசினர். மேலும், மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமும் எழுப்பப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினர் கூறுகையில்.‌‌. நருவலூர் கிராம நிர்வாக அலுவலரை பணி நேரத்தில் திருமுருகன் என்பவர் தாக்கினர். இதுதொடர்பாக நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தும் ஒரு வார காலமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், வருவாய் துறை அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்த், சரவணகுமார், விஜயகாந்த் உள்பட 400-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த் துறை சார்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கட்கிழமை (அக்டோபர் 14) மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய திருமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என வருவாய்த் துறை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Similar News