உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 7-வது முகாமாக பரமத்தி வேலூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆய்வு.

Update: 2024-10-17 13:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். நாமக்கல் மாவட்ட ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பரமத்தி வேலூர் வட்டம், நல்லூர் ஊராட்சி, கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நல்லூர் மற்றும் குன்னமலை அங்கன்வாடி மைங்களில் வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதிற்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், போஷான் செயலியில் குழந்தைகளின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, குன்னமலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்தும், மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், நல்லூர் நியாய விலைக்கடையில் பொது விநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம், மொத்த குடும்ப அட்டைதாரர்கள் விபரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை கடைக்கு வருகை தந்திருந்த குடும்ப அட்டைதாரர்களுடன் கலந்துரையாடினார். மேலும், குன்னமலையில் புதியதாக சமுதாய நலக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு, நல்லூர் கால்நடை மருந்தகத்தில் மருந்து பொருட்களின் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மேல்சாத்தம்பூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விபரம், வருகை பதிவேடு, அரசின் திட்டங்களில் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை, கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வேலூர் ஆதிதிராவிடர் நல அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, விடுதியில் மாணவர்களுக்கான அறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவுப்பொருட்களின் இருப்பு, படுக்கை வசதி, கழிப்பிட வசதி, மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பொருட்களின் தரம், நெகிழி பை பயன்பாடு, உணவுப்பொருட்களின் கலாவதி தேதி உள்ளிட்டவை குறித்தும், பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் பொது சுகாதார வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்குமாறு பொதுமக்கள் மற்றும் அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பரமத்தி வேலூர் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சார்ந்த உயர் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள்.

Similar News