மறுகால் பாயும் தண்ணீரில் ஆபத்தான நிலையில் மீன் பிடிக்கும் மக்கள்
சிவகங்கை அருகே கண்மாய் நிரம்பி மறுகால் நீரில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர்
சிவகங்கை மாவட்டம், பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நீரில் ஆபத்தை உணராமல் பலரும் மீன் பிடித்து வருகின்றனர். 650 ஏக்கர் பரப்பளவுள்ள பூவந்தி கண்மாயை நம்பி இரண்டாயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றின் இடது பிரதான கால்வாய் மூலம் பூவந்தி கண்மாய்க்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் வைகை ஆற்றில் மழை தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மழைத்தண்ணீர் வந்ததால் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வெளியேறுகிறது.பூவந்தி கண்மாய் நிரம்பி மடப்புரம், ஏனாதி, தேளி என அடுத்தடுத்த கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும், பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் நிலையில் சீறிப்பாயும் தண்ணீரை எதிர்த்து நீந்தும் மீன்களை சுற்றுவட்டார கிராம மக்கள் ஆபத்தை உணராமல் இடுப்பளவு தண்ணீரில் நின்று பிடித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கண்மாய்க்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது. வெளியேறும் தண்ணீர் ஆக்ரோஷமாக பாய்ந்து வருகிறது. விபரீதம் ஏற்படும் முன் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்