சிவன் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரம், பாகம்பிரியாள் அம்பாள், உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்ட செல்வம், சண்முகம் ஆகியோர் நடத்தினர். கொடியேற்றம் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி, இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செல்வி, கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம் மண்டகபடிதாரர் தொழிலதிபர் கேஏபி சீனிவாசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9ம் திருநாளான 27ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யான வைபவம் நடக்கிறது.