விவசாயிகளுக்கு மானிய விலையில் மூலிகை கன்றுகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் மூலிகை கன்றுகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் மூலிகை கன்றுகள் வழங்கப்படுகிறது. இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமாரபாளையம் பகுதியில் நெல் சம்பா பருவம் தொடங்கி விறுவிறுப்பாக நடவுப்பனிகள் நடந்து வருகிறது. நான்காயிரம் ஹெக்டேரில் சாகுபடி பரப்பு எதிர்பார்க்கப்படுகிறது. நெல் பயிரினை பூச்சி தாக்குதலிருந்து பாதுகாக்க ரசாயன மருந்தில்லா சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பராமரிக்க ஏதுவாக தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் என்ற திட்டம் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல், மூலிகை கன்றுகளான ஆடாதொடை, நொச்சி, வேம்பு, ஆகிய கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. இந்த மூலிகை செடிகளை விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் வளர்த்து, இதிலிருந்து இலைகளை பறித்து இயற்கை பூச்சி விரட்டி கரைசல் தயார் செய்து இலை மேல் தெளித்து, நெற்பயிரை காக்கும் பூச்சிகளை விரட்டியடிக்கலாம். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் இல்லை. நெல்மணிகளிலும் எந்தவொரு நச்சுத் தன்மையும் தங்காது. விவசாயிகளுக்கு சாகுபடி இடுபொருள் செலவு கணிசமாக குறையும். தங்கள் வயலில் மூலிகை கன்றுகளை வளர்ப்பதால், மருந்து தேடி எங்கும் அலைய வேண்டியது இல்லை. ஆடாதொடை, நொச்சி, வேம்பு எல்லாவிதமான சூழ்நிலையில் வளரக்கூடியது. தனியாக பராமரிப்பு வேண்டியது இல்லை. விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் 20 அடிக்கு ஒரு செடி என்ற வீதம் நடலாம். ஒரு விவசாயிக்கு ஆடாதொடை 25 கன்றுகள், நொச்சி 25 கன்றுகள், வேம்பு 60 கன்றுகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் ஆதார், பட்டா ஆகியவற்றை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். அனைத்து மூலிகை கன்றுகளும் குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே உள்ள நர்சரியில் வைத்து பாதுக்காக்கப்படுகிறது. இவ்வாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.