காரைக்குடி - தேவகோட்டை சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
தேவகோட்டை சாலையில் பாதாள சாக்கடை குழாய்களால் அடிக்கடி ஏற்படும் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் 2017ல் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. தேவகோட்டை ரஸ்தாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் செல்லும் வகையில் தேவகோட்டை நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. புதிய சாலைப்பணி, கனமழை காரணமாக இணைப்புகளில் பல்வேறு சிக்கல் நிலவியது. மேலும் பாதாளச் சாக்கடை குழாயில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு காரணமாக குழாய்கள் உள்ளே மூழ்கியது. சாலையின் நடுவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளம் தோன்றியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மீண்டும் சாலையின் நடுவே பள்ளம் தோன்றியது. அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர். போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். முழுமையாக சாலையில் உள்ள ஆள் நுழைவு குழாய்களை ஆய்வு செய்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.