எலச்சிபாளையம் ஒன்றியத்தில் கலைத் திருவிழா கோலாகலம்:
எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட குருவள மையங்களில் கலைத் திருவிழா கோலாகலமாக நடந்தது.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் துவங்கியது. இதில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலம் கலையரசன் மற்றும் கலையரசி பட்டம் வழங்கப்பட உள்ளது. 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மூலம் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் வட்டார அளவிலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது. மாநில அளவில் முதலிடத்தை பிடித்த மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி என்ற பட்டங்கள் வழங்கப்பட்டு அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வி ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு 23.10.24 முதல் நடைபெற்று வருகிறது. குறுவள மைய அளவிலான இப்போட்டிகள் வேலாகவுண்டம்பட்டி, மாணிக்கம் பாளையம், உலகப்பம்பாளையம், இலுப்புலி, எலச்சிபாளையம், பெரிய மணலி ஆகிய மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றது. இக்கலைத் திருவிழா போட்டிகள் மூலம் எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள 77 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1186 மாணவர்கள் தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்த உள்ளனர். மைய வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எலச்சிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடக்கநிலை, நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.