சிவன்மலை கிரிவலப்பாதையில் வாக்கத்தான் நிகழ்ச்சி - காவல்துறையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்க தினம் அனுசரிப்பு
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் காவல்துறை சார்பில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடன் இணைந்து மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை கிரிவலப்பாதையில் காங்கேயம் காவல்துறை சார்பாக காவல் பணியில் உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள் மற்றும் காங்கேயம் ரன்னர்ஸ் அமைப்பினருடன் இணைந்து மினி மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. சிவன்மலை கிரிவலப்பாதையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தை 1 முறை மற்றும் 2 முறை போட்டியாளர்கள் கடந்து சென்றார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாரத்தானில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் " கூகுள் பார்ம் " என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார், சாவடிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர் விஜயகுமார், காங்கேயம் காவல் துறையினர், அரசு மருத்துவமனை செவிலியர்கள்,அரசு ஊழியர்கள், ரன்னர்ஸ் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.