தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா
தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழா தாளவாடி மலைப்பகுதியில் ஒருவர் மீது ஒருவர் சாணியடிக்கும் விநோத திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் மேல் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்து 3 நாட்களுக்கு பிறகு சாணியடிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக ஊரில் உள்ள அனைத்து பசுமாட்டு சாணங்கள் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் மலை போல் குவித்து வைக்கப்பட்டது. பின்னர் மதியம் அருகே உள்ள குளத்திலிருந்து தாரை தப்பட்டைகள் முழங்க நடைபெற்ற சுவாமி அழைப்பு நிகழ்ச்சியில் பச்சைப் புல்லில் மீசை செய்து அலங்காரம் செய்யபட்ட ஒருவர் கழுதை மேல் அமரவைத்து சுவாமி கோயிலுக்கு ஊர்வலமாக ஆடிப்படி அழைத்து வந்தனர். அதைத்தொடர்ந்து சிறுவர் மற்றும் இளைஞர்கள் 100 க்கும் மேற்பட்டோர் அனைவரும் வெற்றுடம்புடன் கோயிலுக்கு பின்புறம் கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக உருட்டி ஒருவருக்கொருவர் மீது அடித்து விளையாடி மகிழ்ந்தனர். சுமார் 2 மணி நேரம் சாணியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர். இந்த திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவதாகவும், திருவிழா முடிந்தவுடன் இச்சாணத்தை விவசாய நிலத்தில் போட்டால் விவசாயம் செழிக்கும் என ஐதீகம் என கோயில் பூசாரி தெரிவித்தார் . இந்த வினோத விழாவை காண கர்நாடக மாநிலத்தில் இருந்தும், தாளவாடி சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர்.