ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது
இந்து சமய ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்
ஆண்டிபட்டியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நிகழ்வு நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடைவீதியில் பழமை வாய்ந்த புராதன சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பாலாலய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது . இந்து சமய ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம் . மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 10 .7 .2011 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று ,தற்போது 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதால், மீண்டும் ஆகம விதிகளின்படி கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலைத்துறையின்ரும், பொதுமக்களும் முடிவு செய்து, அதற்கு முன்னேற்பாடாக ஆகம விதிகளின்படி நேற்று கோவில் வளாகத்தில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை பீடத்தில் தீர்த்த குடங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் பலகைகளில் மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மற்றும் பரிவார தெய்வங்கள் மற்றும் கோபுரப் படங்கள் வரையப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது .பூஜிக்கப்பட்ட குடங்களில் தெய்வ சக்தி நிலை நிறுத்தப்பட்டு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ,ஆண்டிபட்டி யூனியன் சேர்மன் லோகிராஜன், பேரூராட்சி சேர்மன் சந்திரகலா மற்றும் நிர்வாகிகளுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார் மற்றும் ஆய்வாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கோவில் பகுதிகள், கோபுர கலசங்கள் புனரமைப்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலைத்துறையினர் தெரிவித்தனர்.