அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் எம்.பி. கே.ஆர் .என் ராஜேஷ்குமார் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள்.
நாமக்கல் மாவட்டத்திலிருந்து ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் பொதுமக்களுக்கு மொத்தம் ரூ.68.87 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் தகவல்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில் மழையின் காரணமாக வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். நாமக்கல் மாவட்டத்தில் மழையினால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கு வீடுகளை சீரமைக்க 10 நபர்களுக்கு தலா ரூ.4,000/- மற்றும் 1 நபருக்கு ரூ.8,000/- என மொத்தம் ரூ.48,000/- நிவாரண உதவித்தொகையையும், 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ உப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய், 1 பாக்கெட் பிஸ்கட், 1 பாக்கெட் பிரட், 1 பெட்டி மளிகை பொருட்களின் தொகுப்பு, 2 சேலைகள், 2 வேட்டிகள், 1 பெட்டி பாத்திரங்கள், 1 பாய், போர்வை, கம்பளி, கொசுவலை, படுக்கை விரிப்பு மற்றும் 1- வாளி உள்ளிட்ட நிவாரண பொருட்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வழங்கி ஆறுதல் கூறினார். முன்னதாக, நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு ரூ.10.33 இலட்சம் மதிப்பில் பல்வேறு வகையான நிவராண பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் முன்னிலையில் கொடியசைத்து அனுப்பி வைத்தார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘ஃபெஞ்சல்’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் பொதுமக்களுக்கு 10 கனரக வாகனங்கள் மூலம் மொத்தம் ரூ.68.87 இலட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகை பொருட்கள், பால் பவுடர், சர்க்கரை, ரொட்டி, சோப், தீப்பெட்டி, பக்கெட், மக் உள்ளிட்ட பல்வேறு வகையான நிவராண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.