5 வருடத்தில் 32 பேர் நாய் கடியால் இறப்பு
மதுரை மாவட்டத்தில் 5 வருடங்களில் 32 பேர் நாய் கடியால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் பலர் காயமுற்றனர். இது தொடர்பாக ஆர்டிஐ ஆர்வலரான என்.ஜி.மோகன் என்பவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்கள் கேட்டு மனு செய்திருந்தார். அதில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 2020 ஜனவரி 1 முதல் 2024 நவம்பர் மாதம் வரைநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் நாய்கடியால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை கேள்வியாக கேட்டிருந்தார். அதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அளித்துள்ள பதிலில்,” கடந்த 2020-ம் ஆண்டு 30,168 பேர் உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் ஒருவர் நாய்க்கடியால் ரேபிஸ் நோயல் இறந்ததாகவும், 2021-ம் ஆண்டு 29 ஆயிரத்தி 100 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோய் வந்து இறந்ததாகவும், 2022-ம் ஆண்டு 30391 பேர் சிகிச்சை பெற்றதில் 5 பேர் நாய் கடியால் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும், 2023-ம் ஆண்டு சிகிச்சை பெற்றதில் 23741 பேர் சிகிச்சை பெற்றதில் 11 பேர் நாய்க்கடி ரேபிஸ் நோயால் இறந்ததாகவும், 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20123 பேர் சிகிச்சை பெற்றதோடு அதில் 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்ததாகவும் பதில் அளித்துள்ளனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 1லட்சத்தி 33ஆயிரத்தி 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தள்ளதாகவும் ஆர்டிஐ மூலம் வெளியாகியுள்ளது.