கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு வந்த மாணவிகள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியில் நடந்த அவலம்

Update: 2024-12-12 06:05 GMT
திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலை, 9 மணி வரை தொடர்ச்சியாக பெய்தது. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் செல்லக்கூடிய காலை, 8 மணியில் இருந்து, 9 மணி வரை தொடர்ச்சியாக மழை விடாமல் பெய்தது. தமிழகத்தில், 21 மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையிலும், திருச்சி மாவட்டத்தில் கடைசிவரை விடுமுறை அளிக்கப்படவில்லை. குறிப்பாக, 'ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற சிறிய குழந்தைகள் பயிலக்கூடிய தொடக்கப் பள்ளிகளுக்காவது விடுமுறை அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கை பெற்றோர் தரப்பில் எழுந்தது. ஆனாலும், 'திருச்சி மாவட்டத்தில் இன்று காலை வரை, 1.67 சென்டிமீட்டர் மட்டுமே மழை பெய்து இருக்கிறது. 10 மணிக்கு மேல் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை' என்று ஆட்சியர் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கொட்டும் மழையில் மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடியும், ரெயின்கோட் அணிந்தபடியும், சிலர் மழையில் நனைந்தபடியும் பள்ளிகளுக்கு சென்றனர். குறிப்பாக, இன்று அரையாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவ, மாணவிகள் மழை காரணமாக கடும் சிரமத்துக்கு இடையே பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். 'மழையின் போது சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவெடுக்கலாம்' என்ற அரசின் உத்தரவு இருந்தபோதிலும், மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எவ்வித உறுதியான தகவலும் வழங்கப்படவில்லை. இதனால், இன்று பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கடும் அவதிக்கு உள்ளாயினர். 'பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் தொகுதியில், மழையின் காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. நடக்கவே பயன்படுத்த முடியாத நிலையில் சாலைகள் சேறும், சகதியுமாக கிடக்கின்றன. இத்தகைய சூழலில் தான் பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்க வேண்டுள்ளது. இதை, திருச்சியில் தங்கியிருக்கும் அமைச்சருக்கும், ஆட்சியருக்கும் தெரியாமல் இல்லை. மேலும், மழைக்காலம் என்பதால் பல குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறது. இவர்கள் இன்று பள்ளிக்கு செல்லும்போது, மற்ற மாணவர்களுக்கும் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்று ஒருநாள் விடுமுறை விட்டால் குறைந்தா போய்விடும்' என்று பெற்றோர் கோபத்துடன் புலம்பியபடியே சென்றனர்.

Similar News