ரசாயண கழிவுகள் ஒப்படைப்பு
ஈரோட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டேங்கர் லாரியில் இருந்த ரசாயண கழிவுகள் கோவை சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைப்பு
ஈரோடு சூளை அருகே பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் கடந்த 1-ம் தேதி ரசாயண கழிவுகளை கொட்ட வந்த டேங்கர் லாரியை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று டேங்கர் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில், ரசாயண கழிவு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பாலிஸ்டர் நிறுவனத்தினுடையதும் என்பதும், அந்த கழிவு மறுசுழற்சிக்காக விழுப்புரம் கொண்டு செல்வதாக கூறி ரசீது தயார் செய்து கொண்டு வந்து ஈரோடு பாரதி நகரில் கொட்டுவதற்கு கொண்டு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, டேங்கர் லாரியை பறிமுதல் செய்து, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், டேங்கர் லாரியில் இருந்து கடும் துர்நாற்றத்துடன் ரசாயண நெடி அடித்து வந்ததால் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இதையறிந்த ஈரோடு தாசில்தார் முத்துக்கிருஷ்ணன், டேங்கர் லாரியின் கழிவுகளை அகற்றிட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையின்பேரில், ஈரோடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த டேங்கர் லாரியின் கழிவுகளை கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மீண்டும் லாரி ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ஈரோட்டில் குடியிருப்பு பகுதியில் ரசாயண கழிவுகளை கொட்ட வந்த லாரியின் பதிவு எண்ணை ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லாரியில் இருந்த கழிவுகள் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒப்படைத்து, சுத்திகரிக்க ஒப்படைத்துள்ளோம். மேலும், அந்த லாரியில் இருந்த ரசாயண கழிவுகளுக்கு சொந்தமான கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீது கோவை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில், நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதுதொடர்பான அறிக்கையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைக்கும் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.