பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
மின் விளக்கை சரி செய்ய கோரி தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவேரி ஆர் எஸ் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த சாலை முழுவதும் மின்விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் , இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.இதை சாதகமாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இரவு நேரத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். பழுதான மின்விளக்குகள் அனைத்தையும் சரி செய்து மக்கள் அச்சத்தை போக்க வேண்டுமென வலியுறுத்தி ,பாரதிய ஜனதா கட்சியின் பள்ளிபாளையம் ஒன்றிய தலைவர் சம்பத் தலைமையில் காவேரி ஆர்.எஸ் ரயில்வே சுரங்கப்பாதை சாலையில் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தம் ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் . இதன் காரணமாக ரயில்வே சுரங்கப்பாதை சாலை பரபரப்பாக காணப்பட்டது .