நாகை ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் நாகை மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவக்குமார் தலைமை வைத்தார். அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நாகை செல்வன் முன்னிலை வைத்தார். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர். சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெய ராஜராஜேஸ்வரன் போராட்ட வடிவங்களை முன்மொழிந்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில அமைப்பின் முடிவின்படி, வாழ்வாதார கோரிக்கையான சிபிஎஸ்-ஐ ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி, மாவட்ட பேரணியை, நாகையில் வருகிற ஜனவரி 9-ம் தேதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நாகை மாவட்டத்தில் 7 7300 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சிபிஎஸ் திட்டத்தின் கீழ் உள்ளனர். இவர்களில் காவல்துறையினர் 300 பேர் உள்ளனர். இவர்களை தவிர்த்து மீதமுள்ள 7000 பேரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் பேரணியை வெற்றிகரமாக நடத்த, ஒன்றியம், ஊராட்சி நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொடர்பாளர்களைக் கொண்டு துண்டறிக்கைகள் மூலம் பரப்புரை செய்ய தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை தியாகராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசமணி, தேசிய ஆசிரியர் சங்கம் அருள் செல்வம், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்கம் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சுந்தரவளவன், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் இயக்குனர் சங்கம் சர்மிளா, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நாகராஜன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில், மாவட்ட தொடர்பாளராக கி.பால சண்முகம், மாவட்ட ஆலோசகராக சுந்தரபாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.