சூரிய உலர்த்திக் கூடம் மற்றும் கடப்பா கல் பொருத்தப்பட்டுள்ள களம்

சிவகங்கை மாவட்டம், வேளாண் விளை பொருட்களுக்கான சூரிய உலர்த்திக் கூடம் மற்றும் கடப்பா கல் பொருத்தப்பட்டுள்ள களம் ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் விவசாய பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

Update: 2024-12-22 08:33 GMT
சிவகங்கை மாவட்டம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் சார்பில், இளையான்குடி மற்றும் திருப்பத்தூர் வட்டார பகுதிகளில் இயங்கி வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மேம்பாட்டு வசதிக்கென, தனியார் நிறுவனங்களின் (Syngenta) பெருநிறுவன சமூகப்பொறுப்பு நிதியின் Corporate Social Responsibility Fund (CSR Fund) கீழ் அமைக்கப்பட்டுள்ள வேளாண் விளை பொருட்களுக்கான சூரிய உலர்த்திக் கூடம் மற்றும் கடப்பா கல் பொருத்தப்பட்டுள்ள களம் ஆகியவைகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மேற்கண்ட பகுதிகளில் விவசாய பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்கின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில், அரசின் திட்டங்கள் வாயிலாக மட்டுமன்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (Corporate Social Responsibility Fund) கீழ் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு பணிகளை மேற்கொண்டு சிறப்பு சேர்த்து வருகின்றனர். அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் Syngenta நிறுவனத்தின் சார்பில் Hand in Hand India மூலம் விவசாய பெருங்குடி மக்களுக்கு பயனுள்ள வகையிலான பல்வேறு பணிகள், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியின்படி, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்ட நிறுவனம் மூலம் முன்னதாக நாட்டரசன்கோட்டையில் கண்மாய்கள் தூர்வாரும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, நடப்பாண்டிலும் அந்நிறுவனத்தின் வாயிலாக பல்வேறு பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இளையான்குடி மற்றும் சிங்கம்புணரி பகுதியில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான பணிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர். Syngenta நிறுவனம் பல்வேறு மாநிலங்களில் தங்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியின் (Corporate Social Responsibility Fund) மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டாலும், தமிழ்நாடு அளவில், சிவகங்கை மாவட்டத்தில் மட்டுமே, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையிலான பணிகளை மேற்கொண்டு வருவது நமது மாவட்டத்திற்கு சிறப்பிற்குரியதாகும். அதற்கென இத்தருணத்தில் அந்நிறுவனத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அதனடிப்படையில், இந்த ஆண்டில் தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் (TNIAMP IV) கீழ் வைகை உபவடிநில பாசனத்தில் பயன்பெறும் 500 விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் இளையான்குடி உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பயனுள்ள வகையில், வேளாண் விளை பொருட்களுக்கான சூரிய உலர்த்திக் கூடத்தினை (Solar Dryer Unit) ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்து கொடுத்துள்ளனர். இந்நிறுவத்தின் முதன்மை தொழிலாக மிளகாய், மல்லி, நெல் போன்ற விளைபொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, e Nam மூலம் விற்பனை செய்வதே ஆகும். அவ்வாறாக விற்பனை செய்வதன் மூலம் ரூ.15.5 இலட்சம் வரை வருவாயும் ஈட்டியுள்ளனர். சிங்கம்புணரி, எஸ்.புதூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3வட்டாரங்களுக்கு உட்பட்டு 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து, திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள செம்பகம்பேட்டை கிராமத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், ஸ்ரீ ஆவுடைய விநாயகர் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு பயனுள்ள வகையில், ரூ. 11 இலட்சம் மதிப்பீட்டில் கடப்பா கல் பொருத்தப்பட்டுள்ள களம் அமைப்பதற்கான பணியினையும் Syngenta நிறுவனத்தினர் Hand In Hand India அமைப்பின் மூலம் மேற்கொண்டுள்ளனர்.இதுதவிர, சேமிப்பு கிட்டங்கி (Storage Unit) அமைப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்நிறுவனத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது மேலும் சிறப்பிற்குரியதாகும். ஸ்ரீ ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்னை தொழிலாக தேங்காய், கொப்பரை, மட்டை தேங்காய் , தேங்காய் நார் (fibre) கருணைக்கிழங்கு, நிலக்கடலை, புளி, நெல் போன்ற பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, அதனை e-Nam மற்றும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதே ஆகும். இந்நிறுவனமானது, 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ12.03 இலட்சமும், 2022-23 ஆம் ஆண்டிற்கு ரூ.55.0 இலட்சமும், 2023-24 ஆம் ஆண்டிற்கு ரூ.03.05 கோடியும், 2024-25 ஆம் ஆண்டிற்கு ரூ.04.55 கோடி வணிகமும் மேற்கொள்ளப்பட்டு, விற்றமுதல் (Turn over) ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தில் e-Nam மூலம் இதுவரை ரூ.02.00 கோடிக்கு வணிகம் மேற்கொள்ளப்பட்டு, ரூ.12 இலட்சம் வரை நிகர லாபம் அடைந்துள்ளது. அவ்வாறாக கிடைக்கப்பெறும் இலாபத்தில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு Dividend (ஈவுத் தொகை) ஒரு நபருக்கு ரூ.200 வீதம் 1000 பங்குதாரர்களுக்கு ரூ.02.00 இலட்சம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்நிகழ்ச்சியின் வாயிலாக அத்தொகையும் பங்குதாரர்களுக்கு வழங்கி, தொடங்கி வைக்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை, மதிப்புக்கூட்டுப் பொருட்களாக உருவாக்கி, அதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்களது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சார்ந்த பங்குதாரர்களுக்கு, இலாபத்தினை முறையாக வழங்கி, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் வாயிலாகவும், Syngenta நிறுவனம் மற்றும் Hand in Hand India அமைப்பு போன்றவைகள் மட்டுமன்றி, பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திடும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வகையான பணிகளை, தாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு, பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் ஆணையரக இணை இயக்குநர் அமுதன், துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தமிழ்ச்செல்வி, Syngenta நிறுவன இயக்குநர் (புதுதில்லி) திரு.வைத்தியநாதன், துணை தலைவர் (Hand In Hand India) கண்ணன், இளையான்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் சுந்தர், ஸ்ரீ ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் அழகர்சாமி, வேளாண்மை அலுவலர்கள் கனிமொழி, புவனேஸ்வரி, உதவி வேளாண்மை அலுவலர் (சிங்கம்புணரி) ரத்தினகாந்தி மற்றும் விவசாயிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News