குடிநீர்த்தொட்டிகளை தூய்மைப் படுத்தினார்
67 குடிநீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்வதற்காக, ரூ.484 கோடி செலவில், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பவானி அருகே ஊராட்சிக்கோட்டை வரதநல்லூரில் உள்ள காவிரியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரித்து ஈரோடுக்கு குழாய்கள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட தொட்டி, வ.உ.சி பூங்காவில் 118 லட்சம் லிட்டர் கொள்ள ளவு கொண்ட தொட்களில் தண்ணீர் விடப்படுகிறது. அங்கிருந்து 67 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் மூலமாக மக்களுக்க குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று மின்தடை அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும், 67 மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முன்னிலையில் நடந்த இந்த தூய்மைப்படுத்தும் பணியில், 150க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 67 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் நேற்று தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. ஒரு சில தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் முழுவதும் வண்ணம் அடிக்கப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாதம் ஒரு முறை குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்து, தினமும் காலையில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படுகிறது.