கோவை மக்கள் சேவை மையம் அமைப்பின் மூலம் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு !
கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது, இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
கோவை மக்கள் சேவை மையம் எனும் தன்னார்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடத்தப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் மத்திய அரசு சார்பில் மகளிர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமரின் கனவு திட்டமான Drone Didi எனும் திட்டம் மூலம் கிராமப் புற பெண்களுக்கு ட்ரோன் இயக்குவதற்கான பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பயிற்சி முகாம் இங்கு நடத்தப்படுகிறது. தி.மு.க வின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று உள்ளது. அதில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக புயல் பாதிப்பிற்கான நிவாரணம் வழங்கவில்லை, டங்ஸ்டன் எடுக்க பா.ஜ.க துணை நிற்கிறது என பொய்யான குற்றச்சாட்டுகள் அதில் உள்ளன. மத்திய அரசின் திட்டத்திற்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும் போது திட்டத்தை எதிர்த்து வருகிறது. இந்த தி.மு.க அரசு. அதாவது கல்வித் துறைக்கு நிதி வேண்டும் என குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசு கேட்கும் போது அதற்கான விளக்கத்தையும், அமல்படுத்தும் முறை குறித்தும் மத்திய அரசு கேட்கும். முதலில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிவிட்டு நடைமுறைப்படுத்தும் போது மாநில உரிமை என பல்வேறு பொய்களை கூறி இவர்கள் திட்டத்தை அமல்படுத்துவதில்லை. புயல், வெள்ள பாதிப்பு போன்ற பாதிப்புகளின் போது பேரிடர் பாதிப்பு நிதியில் இருந்தும், பிரதமரின் சிறப்பு நிதியில் இருந்தும் நிதி வழங்க வழிமுறை உண்டு. இதற்கான கோரிக்கையை மாநில அரசு தெரிவித்து, அதற்கு உரிய விளக்கத்தினை மத்திய அரசு எழுத்துப் பூர்வமாகவே வழங்கி உள்ளது. இதில் விருப்பு, வெறுப்புக்கு எந்த இடமும் இல்லை என தெரிவித்தார்.