தஞ்சாவூர் அருகே குருங்குளம் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை பணி தொடக்கம் நடந்தது. தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழித்தடத்தில் குருங்குளத்தில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கரும்பு உற்பத்தியாளர்களின் கரும்பை அரவை செய்ய ஏதுவாக குருங்குளத்தில் இந்த சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கரும்பு அரவை தொடங்குவது வழக்கம். இதன்படி சர்க்கரை ஆலையில் பூஜைகள் நடத்தப்பட்டு, கரும்பு அரவையை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன், வேளாண் இணை இயக்குனர் வித்யா மற்றும் கரும்பு விவசாயிகள் கோவிந்தராஜ், ராமநாதன், துரை பாஸ்கர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் பிரியங்கா கூறுகையில், குருங்குளம் சர்க்கரை ஆலையில் விவசாயிகள் கேட்டுகொண்டபடி முன் கூட்டியே கரும்பு அரவை தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு, இந்த ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படவுள்ளது. அடுத்த ஆண்டு 2 லட்சம் டன் கரும்பு அரவை செய்யும் வகையில், கரும்பு பயிரிடும் பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சாலை வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.