திமுகவினர் புகாரில் அதிமுக பிரமுகர் கைது கிராமமக்கள் மீட்டுசென்றனர்
குத்தாலம் அருகே அடி பம்ப்பை அகற்றியது தொடர்பாக திமுக நிர்வாகியை ஆபாசமாக திட்டிய அதிமுக ஊராட்சி தலைவியின் கணவர் மீது போலீசார் வழக்கு: - கைது செய்யப்பட்டவரை கிராமமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து போலீசார் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்
. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சென்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக அகர சென்னியநல்லூரை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் பதவி வகித்து வருகிறார். கடந்த சிலl தினங்களுக்கு முன்பு புவனேஸ்வரியின் கணவர் ராஜசேகர் அப்பகுதியில் உள்ள வீரன் கோயில் வளாகத்தில் இருந்த குடிநீர் பம்பை அழகர் என்பவர் மூலம் அகற்றி உள்ளனர். அதனை மாற்றி அமைக்குமாறு அதே பகுதியைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் சதீஷ் என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து அழகர் ராஜசேகரிடம் தெரிவித்ததை அடுத்து சதீஷை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராஜசேகர் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், குத்தாலம் ஒன்றியக்குழுத் தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சதீஷ் மற்றும் ஒன்றியக்குழுத் தலைவர் மகேந்திரன் ஆகிய இருவரும் தனித்தனியே குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் ராஜசேகரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இந்த தகவல் அறிந்த ராஜசேகரின் ஆதரவாளர்கள் 100-க்கு மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து, ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். .