அனைத்து மதத்தவரும் சமத்துவத்துடன் வாழும் மாநிலம் தமிழகம் - முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2024-12-24 15:57 GMT
இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற வன்முறையைத் தவிர்த்து, “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள்” என்று பொறுமையையும், “ஒருவன் உங்களிடம் எதையேனும் கேட்டால் அவனுக்கு அதைக் கொடுத்து விடுங்கள்” என ஈகையையும், “பகைவர்களையும் நேசியுங்கள்” எனக் கூறி இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பையும் விதைத்தவர் இயேசு பெருமான். போர்களினாலும், வெறுப்புணர்வினாலும் உலகம் அல்லலுறும் இவ்வேளையில் அவர் காட்டிய அன்பு வழி, அமைதி வழிதான் மிகவும் தேவையானதாக இருக்கிறது. அத்தகைய அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலுள்ள சிறுபான்மையின மக்களின் நலனுக்காகத் திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் சிறுபான்மையினர் நல ஆணையம், பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நல இயக்ககம் எனப் பல திட்டங்களை மறைந்த முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வந்துள்ளார். அவரது வழியில் தற்போதைய திராவிட மாடல் ஆட்சியிலும்,ஜெருசலேம் செல்வதற்கான நிதியுதவி 60 ஆயிரம் ரூபாயாக உயர்வு. அதுவும் 2024 முதல் நேரடி மானியமாக அதனை வழங்க ஆணை. 8 தொன்மை வாய்ந்த தேவாலயங்களை மறுசீரமைக்க நிதியுதவி. கரூர், மதுரை, தேனியில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவி சங்கங்கள் தொடக்கம். தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மொத்தம் 3 ஆயிரத்து 345 மகளிருக்கு 4.32 கோடி ரூபாய் நிதியுதவி. ஏராளமான கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை அந்தஸ்து. கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், முதலிய பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து, அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Similar News