கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி

சேலத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

Update: 2024-12-25 02:04 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவு சேலத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதன்படி சேலம் அரிசிபாளையம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து திருப்பலி நடந்தது. அப்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் பங்கு தந்தை ஜோசப் லாசர், குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் எடுத்து அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் உயர்த்தி காண்பித்தார். பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் சொரூபத்தை வைத்து சிறப்பு பிரார்த்தனையை தொடங்கி வைத்தார். இதையடுத்து குழந்தை இயேசு சொரூபத்தை தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் தொட்டு வணங்கினர். தொடர்ந்து பேராலயத்திற்குள் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு அங்கிருந்தவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். பலர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்திருந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதே போன்று சேலம் ஜான்சன் பேட்டை அந்தோணியார் ஆலயம், அழகாபுரம் மிக்கேல் அதிதூதர் ஆலயம், சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம் உள்பட மாநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம், அஸ்தம்பட்டி இம்மானுவேல் ஆலயம், கோட்டை லெக்கர் ஆலயம், ஜங்ஷன் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.

Similar News