லாரி கவிழ்ந்து விபத்து
திம்பம் மலைப்பாதையில் இன்று லாரி கவிழ்ந்து விபத்து தமிழக -கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு
தமிழக -கர்நாடகாவை இணைக்கும் மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லும் இந்த சாலை மிகவும் ஆபத்தானது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சமீப காலமாக திம்பம் மலைப்பகுதியில் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள் பழுதாகி விடுவதும், சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்குவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த நேரங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு மக்காச்சோளம் பரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 2 -வது கொண்டை ஊசி வளைவு அருகே செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த மக்காச்சோளம் மூட்டைகள் மலைப்பாதையில் சிதறியது. இதனால் கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்களும், கர்நாடகாவிற்கு செல்லும் வாகனங்களும் சாலையின் இரு புறம் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.