குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான மக்கள் குவிந்து படகுகளை கடலுக்குள்ளும் துறைமுக முகத்துவார பகுதியிலும் எடுத்து சென்று ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான இளைஞர்களும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, படகில் நடனமாடி கொண்டிருந்த வாலிபர் ஒருவர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து மாயமாகி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட அருகில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் குதித்து மாயமான வாலிபரை தேடும் முயற்சியில் இறங்கினர். தொடர்ந்து குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீ அணைப்பு துறையினரும் மீனவ மக்களுடன் சேர்ந்து இராமன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த நிர்த்தீஸ் (20 ) என்ற வாலிபரின் உடலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இது குறித்த தகவல் வாலிபரின் பெற்றோருக்கு தெரியவர அங்கு வந்து அவர்கள் கதறி அழுத நிலையில் வாலிபரின் உடலை புதுக்கடை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.