கரடிமடை: கால்நடை தீவனங்களை உண்டு யானைகள் அட்டகாசம்!
கரடிமடைப் பகுதியில் குட்டியுடன் வந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், விவசாயி ஒருவர் கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை உண்டுள்ளது.
கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. தடாகம் அருகே கரடிமடை பிரிவில் நேற்று இரவு நடந்த சம்பவம் பொது மக்களுடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குட்டியுடன் வந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம், விவசாயி ஒருவர் கால்நடைகளுக்காக உலர வைத்த தீவனத்தை உண்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் ரோந்து வாகனத்தின் ஒலியைக் கேட்டு யானைகள் காட்டுக்குள் திரும்பியதும் கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. இருட்டுப்பள்ளம், பெருமாள்கோவில்பதி, வளையான்குட்டை, முண்டாந்துறை போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனம் அல்லது நடந்து செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து யானைகள் ஊருக்குள் நுழைவது அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.