அரசு மருத்துவமனை சிகிச்சைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலத்தை பாதுகாத்திட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

Update: 2024-12-26 11:02 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நோயாளிகள் நலச்சங்கம் ஆளும் குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் -48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரத்தில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் திருச்செங்கோட்டில் ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவ வசதிகள் பெற மருத்துவமனை கட்ட நிதிஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு உயர் அறுவை சிகிச்சைகள், டயாலிஸிஸ் உள்ளிட்ட சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் வரை அரசு மருத்துவமனையில் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது. இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நோயாளிகள் நல சங்க கூட்டமானது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட உள்ளது. மருத்துவமனையில் உள்ள 142 படுக்கை வசதிகள், இரத்த வங்கி, 3 டயாலிஸிஸ் இயந்திரங்கள், ஜென்செட் முறையாக பயன்படுத்திட வேண்டும். அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிறப்பான சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் அரசுத்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு ஏதுவாக சாய்தளம் மற்றும் கைப்பிடி சுவர் உள்ளிட்டவற்றை முறையாக வைத்திட வேண்டும். உள் நோயாளிகள், புறநோயாளிகள், கர்ப்பிணி பெண்களின் விபரங்கள், சுகப்பிரசவம் விபரம் பராமரிக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கும் உறவினர்களுக்கு முறையாக உணவு அளிக்க வேண்டும். மருத்துவமனையின் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். காவல்துறையினர் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தொடர்ந்து, மகப்பேறு மருத்துவரிடம் ஒரு வருடத்திற்கு மேற்கொள்ளப்படும் பிரசவ விபரம், தாய்மார்களின் விபரம், குழந்தைகள் எடை விபரம் குறித்தும், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரம், மருத்துவமனையில் ஆய்வக செயல்பாடுகள், ஆய்வகத்தில் உள்ள மருந்துகளின் இருப்பு மற்றும் தேவைகள், இரத்த வங்கி இருப்புகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் காச நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் உணவுகள் விபரம், நோயாளர் நலச்சங்க நிதியிலிருந்து நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படும் செலவு உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்தும், பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அனைவரும் காப்பீடு அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காப்பீடு அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதும், நமது மக்களின் சுகாதார நலனை நாம் பாதுகாப்பது நமது கடமை ஆகும் எனவும், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலத்தை பாதுகாத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை விபரம், சிகிச்சைகள், கணினியில் பதிவுகள், நோயாளிகளுக்கான பரிசோதனைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.இக்கூட்டத்தில் இராசிபுரம் நகர்மன்றத் தலைவர் முனைவர் கவிதா சங்கர், இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், துணை இயக்குநர் தொழுநோய் பிரிவு மரு.அ.ஜெயந்தினி, பொதுப்பணித்துறையினர், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News