விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்
விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர்,டிச.28- விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்மன் பொன்னி உள்ளிட்ட தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியது... அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து: தனியார்வேளாண் இயந்திரங்களுக்குவாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்.சாலைகளில்சுற்றித்திரியும் வெறிநாய்களால் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு வனத் துறையில் இழப்பீடு பெற விண்ணப்பிப்பது குறித்துஅரசு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றார். அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, விவசாயிகள் வங்கிகளில வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.மானிய திட்டங்களை பெரும்பாலான விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நடப்பாண்டு, நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்மன் பொன்னி உள்ளிட்ட தரமற்ற மண்ணுக்கேற்காத விதைகளை தடை செய்ய வேண்டும். நெற்பயிர் நடவு காலத்தில் நடமாடும் விதை வங்கி கிராம விவசாயிகளை நோக்கி வரும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு கிராம விவசாயிகளிடமும் கொண்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க கிராம அளவில் வண்டல் மண் முகாம் நடத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஊரக மற்றும் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க பெருந்திட்டம் வகுக்க வேண்டும். வனங்களில் மா, கொய்யா, கொடுக்காப்புளி, புளியமரம், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரங்களை நடவு செய்து பராமரித்து வன விலங்குகளுக்கு உணவளிக்க நடவடிக்கைகள் எடுக்க வனத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில், மருதையாறு, வெள்ளாற்று, வெள்ள நீரை நிரப்பி நீர்த்தேக்கங்களாகவும், 33 சதவீதம் காடுகளாகவும் மாற்றிட சிமென்ட் ஆலை நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்: கன மழையால் பாதிக்கப்பட்ட நெல் விவாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பெரியதிருகோணம் கிராமத்தில் டால்மியா சிமென்ட் ஆலை சுரங்கம் தோண்டப்பட்டதால், அண்மையில் பெய்த மழையால் சுரங்க நீர் மற்றும் மருதையாற்று நீர் புகுந்து 50 ஏக்கர் அளவில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை முற்றிலும் அழிந்துவிட்டது. ஆகவே அந்த சிமென்ட் ஆலை நிர்வாகம் மூலம் அதிக இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். வரத்து வாய்க்கால், பாசன வடிக்கால் அனைத்தையும் அளவீடு செய்து தூர்வாரி கரையில் எல்லைக் கள் நட வேண்டும். பொன்னாறு தலைப்பில் நிரந்தரமாக தடுப்புச் சுவர் அமைத்து, தா.பழூர் பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை அதிகளவில் திறந்து விட வேண்டும்.ஒரே ஊராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஊராட்சி செயலர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும். மாவட்டத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழன் திருவுருவம் சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும். தென்னெந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டியன்:அணிகுதிச்சான், பூவாணி பட்டு ஆகிய ஊர்களிலுள்ள ஏரிகளில் முளைத்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, தூர்வார வேண்டும். பயிர்களை சேதப்படுத்தி வரும் வன விலங்குளை பிடித்து காட்டில் விட வேண்டும் என்றார்.தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். கூட்டத்தில்,வேளாண் இணை இயக்குநர் கீதா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :