அரியலூர் அருகே ஆடு மேய்த்த இளைஞர் ரயிலில் அடிபட்டு பலி
விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை;
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி மகன் மணியரசன் (30). ஒரு கை, ஒரு கால் ஊனமுற்ற இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இவரது தந்தை பழனியாண்டி ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்த நிலையில் நேற்று அவர் வெளியூருக்கு சென்றதால் மணியரசன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அரியலூர் அருகே, கல்லகம் ரயில் நிலையத்திற்கும் கல்லக்குடி பழங்காநத்தம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாள பகுதியின் அருகில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது தண்டவாளத்தை கடந்த ஆடுகள் சென்றதால் அதனை ஓட்டுவதற்காக இவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்ற சரக்கு ரயிலில் எதிர்பாரா விதமாக அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற விருத்தாச்சலம் ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் உயிரிழந்த மணியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.