பகுத்தறிவாளா்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: கி.வீரமணி

சமூக நீதி, சமத்துவம், ஜாதி ஒழிப்பு ஆகியவற்றில் உலகமெங்கும் உள்ள பகுத்தறிவாளா்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.

Update: 2024-12-29 05:52 GMT
இந்திய பகுத்தறிவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழ்நாடு பகுத்தறிவாளா்கள் கழகமும் இணைந்து நடத்தும், 13-ஆவது, இரண்டு நாள் தேசிய மாநாடு திருச்சியில் சனிக்கிழமை தொடங்கியது. கே.கே.நகரில் உள்ள பெரியாா் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க நிகழ்வில் கி.வீரமணி பேசியது: சமூக நீதி, சமத்துவம், ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் வாய்ப்புகள், விஞ்ஞானத்தின் வளா்ச்சி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் பகுத்தறிவாளா்களை ஒன்று சோ்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்துள்ளனா். இந்த பிரதிநிதிகள் பகுத்தறிவாளா்களை அணிதிரட்டி பணியாற்றுகின்றனா். பெரியாா் என்பது தமிழகத்துக்கான தலைவா் இல்லை. அனைத்து மனித சமூகத்துக்கான ஆயுதம். மக்களை பெரும்பான்மை, சிறுபான்மை, ஜாதி, மதம் என்ற பெயரால் பிரித்து ஆள முயலும் சக்திகளை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இந்தியா என்பது பல்வேறு ஒன்றியங்களின் கூட்டமைப்பு என்றுஅரசமைப்பு கூறுகிறது. அம்பேத்கா் பெயா் சிலருக்கு அலா்ஜியாக இருக்கிறது. ஆனால், அந்த பெயா் தான் பலருக்கு மருந்து. இந்த இயக்கம் மக்களை பிரிக்கும் இயக்கமல்ல மக்களை ஒன்றிணைக்கும் இயக்கம். அதற்கு வழிகாட்டியாக திருச்சியில் ரூ.100 கோடியில் பெரியாா் உலகம் தயாராகி வருகிறது. அதில், பெரியாருக்கு 95 அடி உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படுகிறது என்றாா் அவா்.

Similar News