பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் 16 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமைமுதல், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். வடகிழக்குப் பருவமழையால் குற்றாலம் பகுதியில் கடந்த 12ஆம் தேதிமுதல் கனமழை பெய்தது. அதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, பிற அருவிகளில் நீா்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக பழைய குற்றாலம் அருவிப் பகுதி மிகவும் சேதமடைந்ததால் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இந்த அருவியில் 16 நாள்களுக்குப் பிறகு இன்று முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.