பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் - இந்து முன்னணி
பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தக்க ஏற்பாடுகளைச் செய்வதில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம். பழனிக்கு பல லட்சம் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதுபோல திருச்செந்தூருக்கும் முருக பக்தர்கள் ராஜபாளையம், தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் இருந்து செல்கிறார்கள். திருச்செந்தூர் பாத யாத்திரை பக்தர்களுக்கு தனி வழி ஏற்படுத்த திட்டம் செயல்படுத்த துவங்கி ஆண்டுகள் பல ஆன பின்னரும் அதனை இன்னும் நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது தமிழக அரசு. இதுவரை பாதை போடப்பட்ட வழிகளிலும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. அந்தப் பகுதியில் மலம், சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன் காரணமாக விபத்தில் சிக்கும் சூழல் உருவாகிறது. தமிழக அரசு வேற்று மதத்தினர் வெளிநாடு யாத்திரை செல்ல நிதி உதவி அளிப்பதுடன், வழி அனுப்பி வைக்க விமான நிலையம் வரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரிசைகட்டி நிற்பதை பார்க்கிறோம். அவர்கள் தங்குவதற்கு பல இடங்களில் தங்கும் விடுதிகள் மக்கள் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்து வைத்து தமிழக அரசு பராமரிக்கிறது. ஆனால் தமிழர்கள் தங்கள் தெய்வத்தை வழிபட சொந்த மாநிலத்தில் நடந்து செல்வதற்குத் கூட எந்த வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்வதில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பல நாட்கள் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், குளிப்பதற்கும், ஓய்வு எடுக்கவும் தற்காலிக ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால் தமிழக இந்து சமய அறநிலையத் துறை உலக முருக பக்தர்கள் மாநாடு என்று கோயில் நிதியில் நடத்தியதை பெருமை பேசுகிறது. தமிழகத்துக்கு என்று சில விசேஷமான ஆன்மிக செயல்பாடுகள் இருப்பது தனித்துவமானது. அதில் மிகவும் பிரசித்தி பெற்றது விரதம் இருந்து பாத யாத்திரை செல்லும் நிகழ்வாகும். எனவே பாதயாத்திரை செல்ல தனி வழி அமைக்கும் திட்டத்தை விரைந்தும், தரமாகவும் முடிக்க வேண்டும். இரவு நேரங்களில் , விடியற்காலை நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு ஒளிரும் உடை மற்றும் ஆங்காங்கே தற்காலிக ஓய்வுக் குடில், கழிப்பறைகள், குளியலறைகள் முதலானவற்றை ஏற்படுத்தித் தர தமிழக அரசையும் இந்து சமய அறநிலையத் துறையையும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.