துணைவேந்தர் நியமன விவகாரம்: ஆளுநரின் நோக்கம் நிறைவேறாது - உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்
அமைச்சர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, ராராமுத்திரைக் கோட்டையில், வியாழக்கிழமை புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில், ஆளுநரின் செயல்பாடு என்ன என்பதை இந்தியாவே உற்று நோக்குகிறது. ஒவ்வொரு மாநில ஆளுநர்களுக்கும் உரிமை என்ன, கடமை என்ன என்பதை அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெறிமுறைகளில் சொல்லி இருக்கிறது. அதை மீறும் வகையில் உள்ள தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாட்டினால், துணைவேந்தர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. துணைவேந்தர் நியமனத்தில், மூன்று உறுப்பினர்கள் தேர்வுக் குழு என்பதை, நான்காக அதிகரிப்பதன் மூலம் அதை செயல்பட விடாமல் தடுப்பது தான் ஆளுநரின் நோக்கமாக உள்ளது. அவரது நோக்கம் நிறைவேறாது. முறைப்படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு துணைவேந்தர் பதவி நியமனம் செய்யப்படும். மாணவர்களின் நலனில் எதிர்க்கட்சிகள், அரசியல் செய்ய வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி சிந்திக்கின்ற, செயல்படுகின்ற முதல்வராக நமது முதல்வர் உள்ளார்" இவ்வாறு அவர் கூறினார்.