பாபநாசம் பகுதியில் உள்ள கிராமங்களை நகராட்சி, மாநகராட்சி பகுதியில் இணைக்க ம.ம.க. ஜவாஹிருல்லா எம்எல்ஏ எதிர்ப்பு

பொது பிரச்சனை

Update: 2025-01-02 12:07 GMT
பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிராமங்களை அருகிலுள்ள மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சியில் இணைக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை! விடுத்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, அம்மாப்பேட்டை ஒன்றியம், ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அருள்மொழிப்பேட்டை கிராமம், புலவர்நத்தம் ஊராட்சி பவானியம்மாள்புரம் கிராமம் மற்றும் கத்தரிநத்தம் ஊராட்சி தளவாய்பாளையம் கிராமம் ஆகியவை தஞ்சாவூர் மாநகராட்சியுடனும், கும்பகோணம் ஒன்றியம் வலையப்பேட்டை ஊராட்சி அம்மாபேட்டை,வலையப்பேட்டை ஆகிய கிராமங்கள் கும்பகோணம் மாநகராட்சியுடனும், பாபநாசம் ஒன்றியம் சக்கராப்பள்ளி ஊராட்சி அய்யம்பேட்டை பேரூராட்சியுடனும் இணைக்கப்படுவதாக புதிய ஆண்டில் வெளியாகியுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இந்த கிராம பொதுமக்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரின் கருத்துக்களை முறைப்படி கேட்காமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள் இங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. 100 நாள் வேலைத் திட்டம் இழப்பு, வரி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற இழப்புக்களை இந்த கிராம மக்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (பேரூ-2) துறை அரசாணை நிலை எண் 205 மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை அரசாணை நிலை எண் 201 ஆகியவற்றிலிருந்து பாபநாசம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்த கிராமங்களை விடுவிக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Similar News