கடந்த வாரம் பெய்த கனமழையில்

பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு முழு இழப்பீடு

Update: 2025-01-02 12:32 GMT
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சே.கண்ணன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நாகை காடம்பாடி, சங்கமங்கலம், பாலையூர், அழிந்தமங்கலம், செல்லூர், பாப்பாக்கோவில்,ஒரத்தூர், தெத்தி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களை பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர்.ஆனால், பன்றிகளை வளர்ப்பவர்கள் மீதும், பன்றிகள் வயல்வெளிகளுக்கு வருவதை தடுக்கவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது பயிர்கள் கதிரரகி வெளியே வரும் நிலையில், அவற்றை சேறோடும், சகதியோடும் பனறிகள் புகுந்து நாசம் செய்து வருகிறது. மேலும், வயல் வரப்புகளை பன்றிகள் உடைத்து விடுவதால், வயல்களில் தண்ணீர் தேக்கி பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. விவசாயிகள் உயிராக வளர்க்கும் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளை, காலத்தாமதம் இன்றி உடனடியாக பிடித்தால் மட்டுமே பயிர்கள் பாதுகாக்கப்படும். இல்லையெனில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பன்றிகளால் பாதிப்படைந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைவார்கள். எனவே , மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், பாதிப்பை ஏற்படுத்தும் பன்றிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க, வருகிற 4-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரபோஜி பேசுகையில், நடப்பாண்டிற்கான குருவை காப்பீடு தொகையில், மீதமுள்ள தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதி தொகை வழங்க வேண்டிய விவசாயிகளின் பெயர் பட்டியலை தொகையுடன் வெளியிட வேண்டும். கடந்த வாரம் பெய்த கனமழையில், சம்பா பயிர்கள் சாய்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் எனவே, வேளாண் அதிகாரிகளை அனுப்பி கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைப் பொது செயலாளர் மா.பிரகாஷ் பேசுகையில், உளுந்து பயிருக்கு, கடந்த ஆண்டு 5500 ரூபாய் மட்டும் காப்பீடு செய்யப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு உள்ளது போல், தற்போது 18000 ரூபாய் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது என்பது வரவேற்கத்தக்கது. அரசு வருகிற ஜூன் 12 -ம் தேதி தண்ணீர் திறந்து, நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளின் குருவை சாகுபடியை உறுதி செய்ய வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Similar News