தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள்: அதிமுக சார்பில் போராட்டம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறு வகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் ஆகியவற்றை கண்டித்து, தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-02 12:35 GMT
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி 'ஒரு குடும்ப ஆட்சி’ என்று நான் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறேன். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒரு குடும்பத்தின் நலன் சார்ந்தே செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். 'முன்னேர் எப்படியோ, பின்னேரும் அப்படியே’ என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பணியாற்றுவதற்காக பல்வேறு நிலைகளில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்தவர்கள், ஆளும் கட்சி என்ற அதிகாரத் தோரணையில், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டு வருவதோடு, பல்வேறு மக்கள் விரோதச் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தில், அதிகாரப் பதவியில் அமர்ந்துள்ள திமுக-வைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள்; அதிகார துஷ்பிரயோகங்கள் பின்வருமாறு: மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக, மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். 40-ஆவது வட்டம், அருளானந்தம்மாள் நகரில் பள்ளிக் கூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, திமுக மாநகராட்சி மேயர் சுயலாபத்தோடு மனைப் பிரிவுகளாக மாற்றுவதற்கு மாநகராட்சி மாமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும், இது சம்பந்தமாக தனி நபர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குப்பைக் கிடங்கில் குப்பை அகற்றும் டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. மாநகராட்சிப் பகுதிகளில் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் நிறுவனம், இப்பணியை முறையாக செய்யாத காரணத்தால், சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடும் அவல நிலை நீடிக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களை ஆதாய நோக்கத்துடன் வணிக நிறுவனம் மற்றும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்கு ஒதுக்கும் செயலில் திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர். மேற்கண்ட நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் திமுக மாநகராட்சி மேயரின் சர்வாதிகார போக்கிற்குக் காரணமான திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்வென்சன் சென்டர் கட்டப்பட்டு முடியும் தருவாயில், ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இந்த அரங்கத்திற்கு பெயர் மாற்றம் செய்து திறந்து வைத்துள்ளது. இங்கு திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வாடகைக்கு விடப்படும் என மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டு, பின்னர், ஆதாய நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருவையாறு பேருந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் வாகன நிறுத்துமிடத்துடன் கட்டப்பட்டது. விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இவ்வளாகம் திறக்கப்பட்டு கடைகள் ஏலம் விடப்பட்டதாகவும், தற்போது வாகனங்கள் நிறுத்தும் இடத்தை கடைகளாக மாற்றி முறையாக ஏலம் நடத்தாமல் ஆதாய நோக்கத்தோடு ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமலும், ஒரு சில திட்டங்களை, அவர்கள் கொண்டுவந்தது போல் ஸ்டிக்கர் ஒட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. விடியா திமுக அரசின் இத்தகைய செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிலையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள், பல்வேறுவகை வரி உயர்வு, ஆதாய நோக்கத்துடன் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மடைமாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டுதல் முதலான மக்கள் விரோதச் செயல்களை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுக அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தஞ்சாவூர் மாநகரக் கழகத்தின் சார்பில், ஜனவரி 8ம் தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், ரயிலடி தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் காந்தி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர்; தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் என்.எஸ்.சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News