வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுரை
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியர் அறிவுரை;
விருதுநகர் மாவட்டத்திலிருந்து, சமீபத்தில் அயல்நாட்டிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி சில இளைஞர்களை ஏமாற்றி இணையவழிக்குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அப்படி பயன்படுத்தப்பட்ட இளைஞர்கள் தங்கள் தாய்நாடு திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டு திரும்ப வர இயலாத சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். மேலும், தாய்லாந்து, மியான்மர், இந்தோனேசியா போன்ற கிழக்காசியா நாடுகள் உட்பட பிற நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் பல இளைஞர்கள் தவறான மற்றும் போலியான ஏஜென்சி / முகவர்கள் மூலமாக அயல்நாடுகளுக்கு சென்று தங்க இடமில்லாமலும், உணவு இல்லாமாலும், உரிய வேலை கிடைக்காமலும் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தெரிவித்தும், தங்களது உறவினர்களை காப்பாற்றி, பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் என தெரிவித்தும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார் மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அயல்நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்லும் இளைஞர்கள், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவு செய்தோ அல்லது இந்திய அரசின் (https://emigrate.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ அல்லது இவ்விணையதளத்தில் செய்யப்பட்டுள்ள முகவர்கள் / ஏஜென்சிகளை தேர்தெடுத்து அவர்களின் மூலமாகவோ வேலைவாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டும் என்றும், அவ்வாறு வேலை தேடிச் செல்லும் போது உங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள வேலையினை உறுதி செய்தும், உங்களுக்கு வேலை அளிக்கும் கம்பெனியின் விபரங்களை தெரிந்து கொண்டும், உங்களுக்கு வழங்கப்படும் ஊதியம், வேலை நேரம், தங்குமிடம் போன்ற விபரங்களை தெளிவாக கேட்டு அறிந்தும், மேற்கண்ட விபரங்களின் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து, அயல்நாடுகளில் வேலை செய்வதற்கான நுழைவுச்சீட்டு (Work permit Visa) மூலமாக மட்டுமே செல்ல வேண்டும் என்றும், சுற்றுலா நுழைவுச்சீட்டு (Tourist Visa), படிப்பிற்கான நுழைவு சீட்டு (Study Visa) போன்ற இதர வகையில் நுழைவுச்சீட்டுகளில் வேலைவாய்ப்பிற்காக செல்ல கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அயல்நாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடி செல்பவர்கள் தனி நபர் மூலமாகவோ அல்லது போலியான முகவர்கள், நிறுவனங்கள் மூலமாகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி பெருமளவில் பணம் கோரி, யாரவது உங்களை அணுகினால், அவர் குறித்தான விபரங்களை காவல் துறையினரிடம் தெரிவித்து புகார் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அரசின் உரிமங்கள் ஏதுமில்லாமல், அயல்நாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக இந்தியாவில் இருந்து ஆட்களை அனுப்புவது, குடியேற்றச்சட்டம் 1983-ன்படி குற்றம் ஆகும். எனவே இத்தகைய செயலில் ஈடுபடுவதாக தெரியவரும் தனி நபர் முகவர்கள் / ஏஜென்சிகளின் மீது காவல்துறையின்; மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இவ்வாறான செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் தனி நபர் முகவர்கள் / ஏஜென்சி உரிமையாளர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.