எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் நேற்று தொடங்கியது.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மார்கழி மாத உற்சவங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் மீனாட்சி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் இந்தாண்டு எண்ணெய்க் காப்பு உற்சவம் சனிக்கிழமை நேற்று (ஜன. 4) தொடங்கி ஜன. 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் புதுமண்படத்தில் எழுந்தருளினார். அங்கு, அம்பாளுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தப்பட்டு, ஐதீக முறைப்படியான வழிபாடுகளுக்குப் பிறகு தீபாராதனையும், சித்திரை வீதிகளில் அம்பாள் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.