சத்தியமங்கலத்தில், காமதேனு கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் கீழ் செயல்படும் காமதேனு கல்வி நிறுவனங்களின் மேலும் ஒரு அங்கமாக காமதேனு பதிப்பகம் தொடக்க விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இத்தொடக்க விழாவில் , சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு காமதேனு பதிப்பகத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ராஜகுரு மற்றும் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியின் உதவி பேராசிரியர் மணிகண்டன் கலந்து கொண்டனர். இவ்விழாவில் காமதேனு கல்வியியல் கல்லூரி முதல்வர் ராம்பிரபு மற்றும் உதவி பேராசிரியர் மலர்செல்வி இணைந்து எழுதிய 'செயல் ஆராய்ச்சி ' என்ற புத்தகத்தின் முதல் பிரதியை காமதேனு நிறுவனங்களின் செயலாளர் அருந்ததி வெளியிட்டார். விழாவில் காமதேனு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பெருமாள்சாமி முன்னிலை வகித்தார். விழாவில் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குருமூர்த்தி, புலமுதன்மையர் நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், காமதேனு கல்வியியல் கல்லூரி முதல்வர் ராம்பிரபு வரவேற்றார். நிறைவில், காமதேனு கல்வியியல் கல்லூரியின் நூலகர் வடிவேல் நன்றி கூறினார்.