கிட்டாம்பாளையம்: பிளாஸ்டிக் கழிவுகளால் நிழற்குடை !
ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை கொண்டு நிழற்குடை உருவாக்கம்.
கோவை,கிட்டாம்பாளையம் ஊராட்சி, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, அதிலிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நிழற்குடையை உருவாக்கி, தமிழகத்தில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.இந்தப் புதுமையான முயற்சியில், ஊராட்சியில் சேகரிக்கப்பட்ட 1,908 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த கழிவுகள் அரைத்து, மல்டி லேயர் பிளாஸ்டிக் முறையில் செயலாக்கப்பட்டு, ரோபின் சீட், சைடு பேனல் பேவர் பிளாக் போன்ற பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. இவை கொண்டு, அன்னூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள நால் ரோடு சந்திப்பில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம், பிளாஸ்டிக் கழிவுகள் சூழலுக்கு ஆபத்து விளைவிப்பதைத் தடுத்து, அவற்றை பயனுள்ள பொருளாக மாற்றியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு நிழல் தரும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் தலைமை தாங்கி நிழற்குடையை திறந்து வைத்தார். கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி. மனோகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த முயற்சி, மற்ற ஊராட்சிகளுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.