மூங்கில் மண்டபம் போக்குவரத்து மாற்றத்தில் குளறுபடி

காஞ்சிபுரத்தில் மூங்கில் மண்டபம் பகுதியில் போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-01-05 05:03 GMT
காஞ்சிபுரம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, உள்ளூர் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பட்டு சேலை வாங்கவும், கோவில்களில் தரிசனம் செய்யவும் ஏராளமானோர் அன்றாடம் காஞ்சிபுரத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால், ரெட்டை மண்டபம், காந்திரோடு, காமராஜர் சாலை, விளக்கடி கோவில் தெரு, ராஜவீதிகள், கம்மாள தெரு போன்ற பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. நகர் முழுதும் புதிய போக்குவரத்து மாற்றங்களை போலீசார் அமல்படுத்தி வருகின்றனர். காந்திரோடு, பூக்கடை சத்திரம், மூங்கில்மண்டபம் ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைத்து மாற்றம் செய்துள்ளனர். இதில், மூங்கில் மண்டபம் பகுதியில் ஏற்படுத்தியுள்ள போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, மடம் தெருவில் இருந்து காந்திரோடு செல்ல, இடது புறம் திரும்பி சென்று தாலுகா அலுவலகம் அருகே வலதுபுறம் திரும்ப வேண்டியுள்ளது. அங்கிருந்து மீண்டும் மூங்கில்மண்டபம் வந்து இடது புறம் செல்ல வேண்டும். அதுவே மேட்டுத்தெரு செல்ல வேண்டும் என்றால், காந்திரோடுக்கு சென்று வலதுபுறம் திரும்பி மீண்டும் இடதுபுறம் சென்று மேட்டு தெரு செல்ல வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு இந்த நடைமுறை தொந்தரவாக உள்ளது. மடத்தெருவில் இருந்து காந்திரோடு அல்லது மேட்டுத்தெருக்கு எளிதாக செல்ல முடியவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மடத்தெருவில் தடுப்புகள் அகற்றப்பட்டு, அங்கு பழைய நடைமுறையே தொடர வேண்டும் எனவும், போலீசார் பரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர்.

Similar News