பைப்லைன் உடைப்பால் சாலவாக்கத்தில் குடிநீர் வீண்
சாலவாக்கத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகும் அவல நிலை
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், ராஜிவ் காந்தி நகர், இந்திரா நகர், குரும்பரை, நெல்லிமேடு ஆகிய துணை கிராமங்கள் உள்ளன.இந்த கிராமத்தில் 5,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் சேமிக்கப்பட்டு, பூமியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்புலிவனம் சாலையில் உள்ள, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன், பூமியில் புதைக்கப்பட்டுள்ள பைப்லைனில் விரிசல் ஏற்பட்டு, கடந்த இரு மாதங்களாக சாலையிலே தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த நீரானது, அப்பகுதியில் குளம்போல் தேங்கி வருகிறது. இதிலிருந்து, தொற்றுநோய் பரப்பும் கிருமிகள் உருவாகி, அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் உடைந்த பைப்லைனை விரைந்து சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.