வேகத்தடை இல்லாத வளைவு சுங்குவார்சத்திரத்தில் விபத்து அபாயம்
சுங்குவார்சத்திரத்தில் வளைவுகளில் வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஜவுளிக் கடைகள் என, 300 க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல்வேறு தேவைக்காக நாள்தோறும் இங்கு வந்து செல்கின்றனர். அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள, தொழிற்சாலைகளில் பணிப்புரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி வேலைசெய்து வருகின்றனர். இதனால், எப்போதும் இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும். ஸ்ரீபெரும்புதுார் -- காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத் -- மப்பேடு சாலைகள் இணையும் சுங்குவார்சத்திரம் சந்திப்பில் இருந்து, மப்பேடு செல்லும் சாலையில், 100 மீட்டர் தொலைவில் சாலை வளைந்து செல்கிறது. அப்பகுதியில் சாலை நடுவில் 'மீடியன்' இல்லாததால், இரு புறங்களிலும் இருந்து, அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும், அருகே உள்ள கடைக்கு வரும் மக்கள், வேகமாக செல்லும் வாகனங்களால் சாலை கடக்க அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நலனைக் கருத்தில் கொண்டு, வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.