எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் மாநாட்டில் கோரிக்கை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை அமைக்கப்படவுள்ள எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரம் அமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2025-01-06 04:28 GMT
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மாநாடு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காடையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஐடிபிஎல் மாற்றுவழி குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். இதில் அவர் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தனியார் நிறுவனம் அரசு ஒத்துழைப்புடன் விவசாய நிலத்தில் கோவை மாவட்டம் இருகூர் முதல் கரூர் வரை எண்ணெய் குழாய் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதி நிலங்களின் சந்தை மதிப்பு குறைந்தது. மேலும், விவசாயப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை. அரசு வங்கிகள் கூட மேற்கண்ட நிலங்களை அடமானமாக வைத்து கடன் வழங்க மறுத்துவிட்டனர். தற்போது பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் நிறுவனம் சார்பில், இரண்டாவது திட்டமாக கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகுந்தி வரையிலான எண்ணெய் குழாய் அமைக்கும்  திட்டத்தில், குழாய் அமைக்கும் பணி துவங்க உள்ளது. இதில், திருப்பூர் மாவட்டம், முத்தூரிலிருந்து பெங்களூரு வரை இத்திட்டமானது சாலை ஓரத்தில் அமைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் கோவை மாவட்டம் இருகூரிலிருந்து முத்தூர் வரை ஏற்கனவே விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் அமைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே இந்தக் குழாயும் அமைக்கப்படவுள்ளது. எனவே, இருகூரில் இருந்து முத்தூர் வரை எண்ணெய் குழாய்களை சாலையோரத்தில் அமைக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 45 நாள்களாக தொடர்ச்சியாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, காங்கேயத்தில் மாநாடு நடத்தியுள்ளோம். இந்த மாநாட்டில், கோவை இருகூரில் இருந்து முத்தூர் வரை எண்ணெய் குழாய்களை சாலையோரத்தில் அமைக்குமாறும், ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாய்களை தோண்டி எடுத்து, அதனையும் சாலையோரத்தில் அமைக்குமாறும் அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம், என்றார். இந்தக் கூட்டத்தில் சூலூர் எம்.எல்.ஏ., வி.பி.கந்தசாமி, பாஜக விவசாய பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.நாகராஜ்,.காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜ், உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்லமுத்து, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் வெங்கடேச சுதர்சன், காங்கேயம் திமுக ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன்,கருணைபிரகாஷ், கொமதேக கட்சியின் திருப்பூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் காங்கயம்-வெள்ளகோவில் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி,புதிய திராவிடர்களாக கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இமானுவேல் நாடார் உள்ளிட்ட பலர் பங்கேற்று, உரையாற்றினார்கள். இதில், 200 பெண்கள் உள்பட 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News