கும்மிடிப்பூண்டி அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோர்

கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

Update: 2025-01-06 10:10 GMT
கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. கும்மிடிப்பூண்டி காவல் உட்கோட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எளாவூர், சுண்ணாம்பு குளம், ஓபசமுத்திரம், பூவலை, தண்டலம், எகுமதுரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதில் 70 சதவீதம் பெண்களே மது பாட்டில்களை விற்பனை செய்து மது விற்பனையை குடிசைத் தொழில் போல் செய்து வருகின்றனர். போட்டா போட்டியுடன் வீடு வீடாக மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு எளாவூரில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடை மொத்த விற்பனை முனையமாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி அரங்கேறும் இவ்வித சட்டவிரோத செயலுக்கு அரசு டாஸ்மாக் கடை ஊழியர்கள் உதவி புரிவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் சம்பந்தப்பட்ட ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்ட பின்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. சிறப்பாக செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் சட்டவிரோத மதுபாட்டில்கள் விற்பனை மாஃபியாக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதே பாதிப்புக்கு உள்ளாகி வரும் இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Similar News