மீன்சுருட்டியில் திட்டமிட்டபடி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் சாலை மீட்பு போராட்ட குழுவினர் அறிவிப்பு ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் பரபரப்பு*
மீன்சுருட்டியில் திட்டமிட்டபடி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் சாலை மீட்பு போராட்ட குழுவினர் அறிவிப்பால் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது,
அரியலூர், ஜன.6 - ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை, புதிய தார் சாலையாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கா விட்டால் மீன்சுருட்டியில் திட்டமிட்டபடி 8-ம் தேதி மக்களை ஒன்று திரட்டி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என சாலை மீட்பு போராட்ட குழுவினர் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் வரை சாலை அமைக்கப்பட வேண்டும் என அக்கிராம மக்கள் தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்காமல் கிடப்பில் போட்டு வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம், தெருமுனைப் பிரச்சாரம், கருப்புக்கொடி ஏந்தி போராட்டம், மோட்டார் வாகன பேரணி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் வருகின்ற 8-ந் தேதி மீன்சுருட்டி கடைவீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினர் அறிவிப்பு வெளியிட்டு துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிராம மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினரை திங்கள் கிழமை அழைத்தனர். அதன்படி பேச்சுவார்த்தைக்குச் சென்ற சாலை மீட்பு குழுவினர் நீண்ட நேரம் காத்திருந்தும் ஆர்டிஓ வராததால் அதிருப்தி அடைந்து அங்கிருந்து ஏமாற்றுத்துடன் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாலை மீட்பு குழு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவித்து சாலையை செப்பனிட வேண்டுமென்று பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு கண்டுகொள்ளவில்லை. அண்மையில் ஜெயங்கொண்டதிற்கு வந்த தமிழக முதல்வரிடம் இது தொடர்பான மனு அளித்துள்ளோம். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் வரும் 8-ம் தேதி மீன்சுருட்டியில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தோம். இதனிடையே உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு எங்களை அழைத்தனர். அங்கு நாங்கள் சென்றோம். ஆனால் ஆர்டிஓ வரவில்லை இதனால் நாங்கள் ஏமாற்றுத்துடன் வந்து விட்டோம். எனவே திட்டமிட்டபடி 8ம் தேதி மின்சுருட்டி கடை வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.இதில் மீன்சுருட்டி பகுதியை சார்ந்த கிராம மக்கள் சாலை சீரமைப்பு குழு து.தலைவர் செங்குட்டுவன், செயலாளர் சிவசுப்பிரமணியன் பொருளாளர் பெ.பாலகிருஷ்ணன், செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.