திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சித் தலைவர் கலெக்டரிடம் மனு அளித்தார். Advertisement கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவரங்கம் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் லஷ்மிகுமார் ஆகியோர் கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: திருவரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்பது வழக்கம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், சொர்க்கவாசல் வழியாக சுவாமியை தரிசனம் செய்வர்.இந்நிலையில், கோவில் திருப்பணி வேலைகள் நடைபெறுவதால் நடப்பாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாகவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்யாமல், கோவில் நிர்வாகத்தினர் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு கோவில் திருப்பணி வேலைகள் நடந்தபோது சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைவர். எனவே, நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்கவாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.