எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான
2 நாள் பயிற்சி முகாம் தொடக்கம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் திருமருகல் ஒன்றியம் புறாக்கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நேற்று தொடங்கியது. பயிற்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் சாந்தி, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் புவனராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியில், ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில், மாணவர்கள் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர்படுத்தும் வகையில், மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப அரும்பு, மொட்டு, மலர் என்ற பெயரில், கற்றல் வகைப்படுத்தி துணைக்கருவிகளுடன் திறன் மேம்படும் வகையில், ஆசிரியர்களுக்கு பொம்மலாட்டம், கோலாட்டம், நடித்தல், கதை கூறுதல், பேசுதல், விளையாடுதல், பாடுதல், வரைதல் ஆகிய செயல்பாடுகள் மூலம் ஆசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சந்தானம், ஆசிரியர் பயிற்றுநர் துர்கா ஆகியோர் செய்து இருந்தனர். அதேபோல், திருமருகலிலும் எண்ணும் எழுத்தும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.